அசுரன், யுவதி மற்றும் லாக்டவுன்

பெண்மையக் கதைகள்
5 out of 5 (5 ரேட்டிங்க்ஸ்)
இந்தக் கதையைப் பகிர

நகரத்தின் முக்கிய இடத்தில் எட்டு பிரதான சாலைகள் ஒன்று சேர்ந்து ரகசியமாகக் கைகுலுக்கும் இடமாகத்தான் இந்த சுரங்கப்பாதை எண் 712 இது நாள் வரை இருந்திருக்கிறது. எனில் இந்த நகரத்தில் இதுவரை 711 சுரங்கப்பாதைகள் இருக்கிறது என்று அவசரப்பட்டு யாரும் ஒரு முடிவிற்கு வந்துவிடவேண்டாம். அதிகபட்சம் சமீபத்தில் நிருவிய சுரங்கப்பாதையையும் சேர்த்து இந்த நகரத்தில் இருப்பது மொத்தம் 210 தான். அதுபோல 712 என்பது ஒரு ரகசிய எண்ணோ அல்லது மறைமுகமாக குறிப்பிட்ட சிலருக்கு உணர்த்தும் ஒரு அடையாள குறியீட்டு மொழியோ கிடையாது. இந்த எண்ணிற்கான காரணத்தை அறிந்தவர் இதுவரை யாருமில்லை எனலாம். என் வீட்டு ஜன்னலின் வழியாக பார்த்தால் சிகப்பு நியான் ஒளியில் 712 என்ற எண் பளிச்சென்று தெரியும்.

காலை முதல் பின் இரவு வரை மனிதர்களின் நடமாட்டம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கும். அவசர கதியில் மனிதர்கள் ஏதோ சிந்தனை வயப்பட்டு கண் மூடிப்பயணிப்பதைப் போல சுரங்கப்பாதைக்கு அடிக்கடித் தோன்றும். சுரங்கப்பாதையின் மேல் விரைந்து செல்லும் வாகனங்களின் ஒலியை மீறியபடிக்கு மனிதர்களின் காலடி சப்தங்கள் தம்பூராப் பெட்டியில் சிக்குண்டு சிறைப்படுத்தப்பட்ட அலுப்பூட்டும் ஓற்றை சுருதி மயக்கத்தில் கேட்கும். இரவு ஒரு மணிவாக்கில் சலிப்புடன் ஒரு முறை குலுங்கி அடங்கி சுருண்டு படுத்துக்கொள்ள சுரங்கப் பாதை ஏங்கித் தவிக்க மீண்டும் இரவுப் பணி முடிந்து வீடு செல்பவர்களின் காலடி சப்தங்கள் இரவின் அமைதியை மெலிதாக உடைக்கும்.

முக்கிய சுரங்கப்பாதையாதலால் காவலர்கள் அவர்களின் கையில் இருக்கும் லத்திக்குச்சியை சுட்டிக்காட்டி அங்கிருக்கும் சிறிய வியாபரிகளை வேளியேற்ற முயற்சிக்க சில நடுத்தர வயதுப் பெண்கள் நமுட்டுச்சிரிப்புடன் பொய்யாக வேளியேறுவதான பாவனையில் தங்களின் சுறுசுறுப்பைக் காட்டுவார்கள்.

இரண்டு மூன்று நாட்களாக சுரங்கப்பாதையைக் கடந்து சென்ற மக்கள் முன்பு போல இல்லாமல் வழக்கத்திற்கு மாறாக குரலை உயர்த்தி அதிகமாக பேசிக்கோண்டே நடந்தார்கள். இந்த முறை அவர்களின் காலடி சப்தங்களை விட அவர்களின் பேச்சுக் குரல்களே சுரங்கப்பாதை சுவர்களில் பட்டுத் தெறித்தது. அவர்களின் நடையில் கூட ஒருவித தளர்வு தெரிந்தது. ஏதோ ஒன்று நடப்பதற்கான முன் அறிவிப்பாக அவர்களின் தொடர் பேச்சு இருந்தது. அந்தச் சுரங்கப்பாதையைக் கடந்து செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வந்தது. சுரங்கப்பாதையின் மேல் செல்லும் சாலைகளிலும் அவ்வளவாக வாகனங்கள் செல்லவில்லை. அப்படிச் சென்ற ஒரு சில வாகனங்களும் பேரிரைச்சலுடன் அவசரகதியில் கடந்து போனது.

வழக்கமான காலை நேரம். சுரங்கப்பாதையின் நுழைவுப் படிக்கட்டுகளில் ஒரு வட நாட்டு நடுத்தர வயதுப் பெண் தன் குழந்தைக்குப் பால் கொடுத்துக்கொண்டிருந்தாள். கண்களை சுற்றும் முற்றும் சுழலவிட்டு தளர்வாக சுவற்றில் சாய்ந்துகொண்டாள். எதையோ தொலைத்துத் தேடுவது போல தோளில் தொங்கிய துணிப்பையிலிருந்து ஒரு நசுங்கிய பிளாஸ்டிக் பாட்டிலை தேடி எடுத்தாள். அதில் சிறிது தண்ணீர் இருப்பதைக்கண்டு சற்றே ஆசுவாசமானவள் ஜாக்கெட்டை மேலும் தளர்த்தி குழந்தையை பதட்டத்துடன் இறுக அணைத்துக்கொண்டாள். அப்போது பெண் துப்புறவுத்தொழிலாளிகள் இரண்டு பேர் கையில் துடப்பத்துடன் சுரங்கப் பாதையின் படிக்கட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். இருவரில் ஒருத்தி நடுத்தரவயதிலும் மற்றவள் அவளைப் பார்க்கிலும் பதினைந்து வயதிற்கு இளையவளாகத் தெரிந்தாள். நடுத்தர வயது யுவதி புகையிலையை விரல்களால் முறித்து வாயின் இடது பக்கம் ஒதுக்கி வைத்து பொங்கி வரும் உமிழ் நீருடன் மென்று உதட்டைக் குவித்து உமிழ்ந்தாள்.

“இங்கேயெல்லாம் இப்படி வந்து உக்காரக்கூடாது” இளையவள் குழந்தையுடன் அமர்ந்திருக்கும் அந்தப் பெண்ணை விரட்ட நடுத்தர வயதுக்காரி வாயின் ஓரத்தில் துளிர்த்த புகையிலை எச்சிலை கைகளால் துடைத்துக்கொண்டே அந்தப் பெண்ணின் பெயரைக் கேட்டாள். அதற்கு அந்தப் பெண் பதிலளிக்காமல் ஒட்டிய வயிற்றில் இரண்டு முறை வலது கையால் தட்டி வாயருகே கொண்டுபோனாள். அவள் கண்களில் நீண்ட நாள் பசி அம்மணமாகத் தெரிந்தது

நீண்ட நாள் கழித்து எதிர்பாராமல் அந்த இரவில் பொழிந்த மழையின் இரைச்சல் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது. பத்தியம் இருந்து பெற்ற குழந்தையை பக்குவமாகக் கொஞ்சுவது போல அனைவரின் கண்களும் விரிந்து மழையை வீட்டிலிருந்த ஜன்னலில் வழியாக ரசித்தது. ஓரே தாள லயத்தில் தொடர்ந்து மிதந்து வரும் மிதமான இசை மீட்டலில் கசிந்து வரும் துளிர் இசையை கேட்குமாறு மழை எனக்கு மட்டும் ஒரு சலுகை அளித்திருந்தது. மொட்டை மாடியில் அடைபட்டுச் சேர்ந்த மழை நீர் மண் குழாயின் முன் பொறுமை இன்றி பலவிதமான சப்தங்களை ஏற்படுத்தி சுதந்திரம் தேடி வெளியேறி பூமியில் பாய அந்த தொடர் பேரிரைச்சல் நான் ரசிக்கும் இயற்கை மழையின் தாள ஒலியினை சிதைத்து காதை செவிடாக்கியது. சீறி விழுந்த மழை நீர் சுடு மண் தரையில் பள்ளங்களைக் குழித்து தன் கொதிப்பை வெளிக்காட்டியது. மழை ஒன்று, குணங்கள் பல என்று நான் மெல்ல உணரும் சமயம் , செல்லமான துள்ளளுடன் மழைச் சாரல் என் முகத்தில் பட்டுத் தெறித்து என்னை சுய நினைவிற்கு கொண்டு வந்தது. மழையின் உருவம் ஒரு சிறந்த கதகளி ஆட்டக்காரரின் சினேக முக பாவத்துடன் அழுத்தமான கால் முத்திரையை பூமியில் சீராகப் பதித்து அந்தப் பள்ளங்களில் தானே தன்னை முழுவதுமாக நிறைத்து வழிந்து புதுப் பாதைகளை கண்டறியும் தேசாந்திரியைப் போல இப்போது எனக்குத் தெரிந்தது.

சுவற்றிலிருக்கும் கடிகாரத்தை மீண்டும் பார்த்தேன். மணி இரவு ஒன்று. இடையில் விழித்துக் கொண்டால் தூக்கம் தொடர்வதற்கு ஒரு பெரிய போராட்டமே நடத்த வேண்டியிருக்கும். ஜன்னல் வழியாகப் பார்த்தேன். சாலை வெறிச்சோடிக்கிடந்தது. ஈரம் பாவிய சாலைகள் பளிச்சென்றிருந்தது. மனித நடமாட்டம் இல்லாத சாலை எனக்கு என்றும் உவப்பானதாக இருந்ததேயில்லை. அத்தகைய சாலை தனிமையை தன்னுள் வேண்டுமளவு போர்த்திக்கொண்டு தன் சோகங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாமல் மனதில் அடக்கி வைத்துக்கொண்டு திணறுவதைப் போல எனக்குத் தோன்றும். அரசமர இலைகளிலிருந்து வடிகட்டி வழிந்திறங்கிய நிலவின் ஒளி அனாதையான சாலையிடம் துக்கம் விசாரிக்க மரத்தின் கீழே அமர்ந்திருந்த பிள்ளையார் எதையும் கண்டுகொள்ளாமல் எதிரில் இருக்கும் சாலையையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறார். அவசரகதியில் மரக்கிளைகளில் இடம் பிடித்துக்கொண்ட பறவைகள் தங்களுக்கான இருக்கைகளின் இடைவெளிகளை சற்றே தளர்த்தி வசதியாக அமர்ந்து கொள்கிறது. அதனால் ஏற்பட்ட சிறிய சலசப்பில் தூக்கம் கலைந்த கருப்பு நிற நாய் தலை உயர்த்தி மரத்தினைப் பார்த்து மெலிதாக ஊளையிடுகிறது.

பிள்ளையார் கோயிலிற்கு எதிரில் இருக்கும் சாற்றிய அசைவ உணவு விடுதியின் முன்பு நடுத்தர வயதுள்ள யுவதி ஒருத்தியை இறக்கிவிட்டு கருப்பு நிற மாருதி விரைந்து சென்றது. அவள் உணவு விடுதியின் படிக்கட்டில் கால்களை தளர்வாக நீட்டி அமர்ந்து கொண்டாள். மிதமான ஒப்பனை. நொடியில் எவரையும் கவர்ந்துவிடும் பார்வை. அவசரமாக அள்ளிச் சொறுகிய கொண்டை அவளுக்கு மிகவும் அழகாக இருந்தது. அவளை நெருங்கி வாலாட்டிக்கொண்டே வந்த கருப்பு நாயை எட்டி உதைக்கும் பாவனையில் வலது காலை உயர்த்த தலை தெறிக்க ஓடிய நாய் படியின் ஓரத்தில் சுருண்டு படுத்திருந்த கடைக்காரச் சிறுவனின் மேல் தடுமாறி விழுந்தது. கடையின் காவலிற்காக அங்கே படுத்திருந்த அவனுக்கு வயது இருபதிற்கு மேல் இருக்காது. அவன் பதறியபடி விழித்துக்கொண்டான். சேலை மறைப்பில் அடங்க மறுக்கும் அவளின் திமிறிய இளமையை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான். அவனுடைய பார்வையை துளியும் பொருட்படுத்தாமல் யாரிடமோ தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள் அவள். ஒருவன் சுரங்கப்பாதையில் அமர்ந்திருந்த பெண்ணை தன்னுடன் அங்கே அழைத்து வந்தான்.

மேஜையில் வைத்திருந்த பாதி அருந்திய குளிர்பானத்தை கையில் எடுத்துக்கொண்டு மீண்டும் ஜன்னல் வழியாகப் பார்த்தேன். படிக்கட்டில் அமர்ந்துகொண்டு கடைக்காரச் சிறுவன் பீடி குடித்துக்கொண்டிருந்தான். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் உணவு விடுதியின் முன் வந்து நின்றார்கள். அதில் ஒருவன் கருப்புச் சட்டை அணிந்திருந்தான். அவனுடன் வந்தவன் ஏதோ கேட்க, கடைக்காரப் பையன் எதிரில் இருக்கும் சிமெண்ட் சாலையை சுட்டிக்காட்டினான். சுட்டிக்காட்டிய திசையில் வண்டி விரைந்தது. தூரத்தில் பாதி மூடிய ஜன்னலிலிருந்து ஜேசுதாஸின் பாடல் ஒன்று காற்றில் தவழ்ந்து வந்தது.

மீண்டும் அதே இரு சக்கர வாகனம் கடையைத் தாண்டி விரைந்து சென்றது. ஆனால் இம்முறை முதலில் வந்த இருவரில் ஒருவன் வண்டியோட்ட அவன் பின் இருக்கையில் அந்த வடநாட்டு யுவதி கையில் குழந்தையுடன் அமர்ந்திருந்தாள். கருப்புச் சட்டையணிந்தவனைக் காணவில்லை. சிறிது நேரம் கழித்து அங்கு நடந்து வந்த கருப்புச் சட்டைக்காரன் உணவு விடுதியின் படியில் அமர்ந்திருந்த கடைக்காரப் பையனின் அருகில் வந்தமர்ந்தான். தன் கையில் வைத்திருக்கும் சிகரெட் பாக்கெட்டிலிருந்து ஒன்றை உருவி எடுத்து அவனிடம் கொடுத்தான். மறுப்பேதும் கூறாமல் கடைக்காரப் பையன் வாங்கிக்கொண்டான். இருவரும் இதற்கு முன்பு ஏற்கனவே சந்தித்தது போல புன்னகைத்துக்கொண்டார்கள். அந்தப் புன்னகையே இருவருக்குமிடையில் இருந்த தயக்கத்தை தளர்த்த போதுமானதாக இருந்தது. தன் வலது கையை கடைக்காரச் சிறுவனின் தோளில் பற்றி இறுக அணைத்துக்கொண்டான். மீண்டும் மழை தொடர்ந்தது. உயரத்தில் பாதி கட்டிய இற்றுப்போன சாக்கை கருப்புச் சட்டைக்காரன் மேலும் தளர்த்த திரை போல படி வரை படர்ந்து இருவரையும் முழுவதுமாக மறைத்தது.

ஒரு கூர்க்கா தூரத்தில் விசில் ஒலி எழுப்பிக்கொண்டே கடையை நோக்கி நடந்து வந்தான். வழக்கமாக மாதம் ஒரு முறை எங்கள் வீட்டிற்கு வருபவர் என்பதால் அவரிடம் எனக்கு சிறிய பரிச்சயம் இருந்தது. காற்றில் ஆடிய சாக்கை லத்திக் குச்சியால் உயரே தூக்கினான். கடைக்காரச் சிறுவனிடம் தீப்பெட்டி கேட்டார். கருப்புச் சட்டைக்காரனை பார்த்து சிரித்தவன் கடையின் எதிரில் இருக்கும் சிமெண்ட் மேடையில் தளர்வாக அமர்ந்துகொண்டு அவர்களையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். புன்னகைத்தபடியே கடையைக் கடந்து போகும் போது மீண்டும் ஒரு முறை அவர்களை திரும்பிப்பார்த்தான். அவர்களின் கையசைப்புக்குக் காத்திருந்தது போல உற்சாகமாகக் கையாட்டினான். விட்ட தூக்கத்தை கண்களில் முழுவது தேக்கி வைத்தது போல் கருப்புச் சட்டைக்காரனை ஏக்கமாகப் பார்த்தான் கடைக்காரச் சிறுவன். சுவர் கடிகாரத்தைப் பார்த்தேன். இரவு இரண்டு. அதிகபட்சம் இன்றைக்கு மூன்று மணி நேரத் தூக்கம்தான் என்று நினைக்கும் போது மிகவும் களைப்பாக இருந்தது. மீண்டும் ஜன்னலின் வழியாகப் பார்க்க கடைக்காரச் சிறுவன் தன்னை ஒரு நத்தைப்போல் சுறுக்கி அந்தச் சாக்கில் முழுவதுமாக நிறைத்திருந்தான்.

வழக்கமாக நாளிதழ், பால் என்ற எந்த குரலும் என்னை வழக்கம் போல எழுப்பவில்லை. மணி ஏழிருக்கும். வாசலில் குரல் கேட்டுத் திரும்பினேன். அந்தச் வடநாட்டுப்பெண் கலைந்த தலைமுடியுடன், ஆங்காங்கே கிழிந்த உடையுடன் கையில் குழந்தையுடன் நின்றிருந்தாள். உரிமையுடன் என் அருகில் வந்தாள். கிழிந்த புடவையை தாராளமாக விலக்கி ஒட்டிய வயிற்றைக் காண்பித்தாள். இயன்ற மட்டும் போராடி தன்னை தற்காத்துக்கொண்டதற்கான அடையாளமாக உரைந்த உதிரக் கீரல்கள் பாவிய அவளின் உலர்ந்த மார்பகத்தை இறுகப் பற்றிக்கொண்டு குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தது. அவளின் கண்களில் தெரிந்த தணியா பெருஞ்சினமும், நகக் கிரீடங்களில் உரைந்திருந்த உதிரமும் காண அசுரர்களை வென்ற ஒரு காளியாக அவள் எனக்கு இப்போது தெரிந்தாள்.

நீங்கள் விரும்பும் கதைகள்

X
Please Wait ...